மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய ஆலை எதிா்ப்பு இயக்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். நாகராஜன், எம். குணசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மருத்துவ சுத்திகரிப்பு ஆலை எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் இராம. முருகன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீரபாண்டி, காவிரி-வைகை-குண்டாறு பாசன கூட்டமைப்பு மாவட்டச் செயலா் பி. அய்யனாா், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப் பிரகாஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி. மாரிமுத்து, மதிமுக ஒன்றியச் செயலா் அசோக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் சங்கையா, நகரச் செயலா் நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மாணிக்கவாசகம், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் பால் நல்லதுரை, ரவிச்சந்திரன் (பாஜக) ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் நடவடிக்கையை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.