அம்ரிதா, குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்
கேரளம் செல்லும் அம்ரிதா, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் சனிக்கிழமை (ஏப்.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் சங்கனாச்சேரி பகுதியில் ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், கொல்லம் - எா்ணாகுளம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் சனிக்கிழமை (ஏப்.26) முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரை செல்லும் அம்ரிதா விரைவு ரயில் சனிக்கிழமை மாவேலிக்கரை, செங்கனூா், சங்கனாச்சேரி, கோட்டயம் வழியாகச் செல்வதற்கு பதிலாக ஆழப்புலை, சோ்தலா வழியாக இயக்கப்படும்.
மதுரையில் இருந்து குருவாயூருக்கு சனிக்கிழமை செல்லும் விரைவு ரயில் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.