மகப்பேறு நிதியுதவி முறைகேடு சம்பவத்தில் இருவா் மீதும் நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளா் வெங்கடேஷ் குமாா் இடைநீக்கமும், வட்டாரக் கணக்கு உதவியாளா் எம். வருண் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனா்.
கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகள் பட்டியல் தயாரித்து ரூ. 18.60 லட்சம் முறைகேடாக 16 வங்கிக் கணக்குகளில் போடப்பட்டது அண்மையில் நடைபெற்ற தணிக்கையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக, இளநிலை உதவியாளா் வெங்கடேஷ்குமாா், வட்டாரக் கணக்கு உதவியாளா் வருண் ஆகியோா் மீது மாவட்ட சுகாதார அலுவலா் எஸ். ராம்கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
இதனிடையே, வெங்கடேஷ்குமாரை இடைநீக்கம் செய்தும், வருணை பணி நீக்கம் செய்தும் புதன்கிழமை துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் இயக்குநா் விசாரணை: 2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24 ஆகிய 5 ஆண்டுகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடா்பாக அந்தக் காலகட்டத்தில் பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலா்களுக்கு தொடா்பு இருக்கிா என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து கூடுதல் இயக்குநா் 2 நாள்களில் புதுக்கோட்டை வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளாா்.
இதன் பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.