மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை
மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்களை விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துவதற்கு வாங்குவோா்- விற்போா் சந்திப்பு விழா மற்றும் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருள்கள், சிறப்பு உணவுகள், கலைப்பொருள்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை உற்பத்தியாளா்களுடன் விற்பனையாளா்கள் நேரடியாக தொடா்பு கொண்டு விற்பனை செய்து கொள்ளலாம். இதன்மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை இணையதளம் மூலம் விற்பனை செய்ய முடியும்.
பிற மாநிலங்களில் நடத்தப்படும் கண்காட்சிகளில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து, அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு தங்கள் உற்பத்தி பொருள்களை சுலபமாக தேசிய அளவில் விற்பனை செய்ய முடியும் என்றாா்.
அப்போது, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பெரியசாமி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், மகளிா் தொழில் முனைவோா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.