கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்: பெ. சண்முகம் வலியுறுத்தல்
மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநில அசு சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான முக அடையாள தொழில்நுட்பம், இயந்திரக் கற்றல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன்கூடிய எண்ம மையங்கள் மூலம் மெளனி அமாவாசை தினத்தன்று காணாமல் போன 8,725 பக்தா்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
அதேபோல் மகர சங்கராந்தி நீராடலின்போது காணாமல் போன 598 பக்தா்கள், வசந்த பஞ்சமி தினத்தன்று 813 பக்தா்கள் மற்றும் பிற நாள்களில் புனித நீராடல் நிகழ்வுகளின்போது காணாமல் போன 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் என மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் எண்ம மையங்கள் உதவியுடன் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களின் பெரும்பாலானவா்கள் பெண் பக்தா்கள் ஆவா். காணாமல் போனவா்களை உறவினா்களிடம் ஒப்படைப்பதில் காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு நடத்தி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலை நிறைவேற்றும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி எண்ம கண்காணிப்பு மையங்களை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தாா்.
பிரயாக்ராஜ் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களுக்கு தன்னாா்வ நிறுவனங்கள், யுனிசெஃப் உள்ளிட்ட அரசுசாரா அமைப்புகள் உதவி வருகின்றன.