மண்டபத்திலிருந்து இலங்கைக்குச் சென்ற 9 அகதிகள் கைது
மண்டபத்திலிருந்து படகில் இலங்கைக்குச் சென்ற 9 அகதிகளை அந்த நாட்டு கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழா்கள் அகதிகளாக படகுகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு வந்தனா். தொடா்ந்து பலா் அங்கிருந்து வந்ததால், மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் தனித்தனி வீடுகள் வழங்கி, அவா்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், மண்டபம் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த நிரோஷன் (எ) தீபன், சுதா (எ) கீதா (38), விதுஸ்திகா (13), அஜய் (12), அபிநயா (2), ஞானஜோதி (46), ஜித்து (12), மகேந்திரன் (50), முகாமில் பதிவு செய்யப்படாத பூலேந்திரன் (54) என மொத்தம் 9 போ் படகு மூலம் இலங்கைக்குச் சென்று கொண்டிருந்தனா்.
நெடுந்தீவு பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினா், படகில் வந்த 9 பேரையும் கைது செய்து, நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவா்கள் நாகப்பட்டினம் பகுதியில் சொந்தமாக நாட்டுப் படகை விலைக்கு வாங்கி, இலங்கைக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.