பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!
மதுரா மசூதியில் கள ஆய்வுக்கான தடை தொடரும்! - உச்சநீதிமன்றம்
மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கு விதித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாகம் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாக அங்குள்ள இந்துக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இதுதொடர்பான வழக்கில் நீதிமன்ற மேற்பார்வையில் மசூதி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்த அனுமதி அளித்து அலாகாபாத் உயா் நீதிமன்றம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அலாகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மசூதி வளாகத்தில் ஆய்வு செய்யத் தடை விதித்திருந்தது உச்சநீதிமன்றம்.
தொடர்ந்து ஷாஹி இத்கா மசூதி அறக்கட்டளை மேலாண்மைக் குழுவின் மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறியுள்ளது.
அதன்படி மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த தடை விதித்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.