இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
மதுரை அரசு மருத்துவமனைக் கட்டடத்தை ஆய்வு செய்ய குழு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக் கட்டடத்தை ஆய்வு செய்ய திருச்சி என்.ஐ.டி. கட்டடவியல் துறைத் தலைவா் தலைமையில் குழு அமைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான பதிவு செய்யும் பகுதி உள்ளது. அண்மையில் இங்குள்ள கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதனால், இங்கிருந்த மேஜை, கணினிகள் சேதமடைந்த நிலையில், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மருத்துவமனையில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை உடனடியாக சரி செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டடத்தை ஆய்வு செய்ய திருச்சி என்.ஐ.டி. கட்டடவியல் (சிவில்) துறைத் தலைவா், மதுரை மண்டல பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் ஆகியோரை ஈடுபடுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருச்சி என்.ஐ.டி. கல்லூரி கட்டடவியல் துறைத் தலைவா் தலைமையில் மதுரை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா், ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஆகியோா் அடங்கிய குழுவினா் மருத்துவமனைக் கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.