கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும்...
மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு
தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகளையும், விழாக்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் சௌராஷ்டிரா சமூக அமைப்பினர் மதுரையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வரும் நிலையில் அடுத்ததாக `அரசியல் எழுச்சி மாநாடு’ நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டை 'சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழு' என்ற அமைப்பு ஒருங்கிணைக்க உள்ள நிலையில், இதன் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் மதுரையில் நடந்தது. இதில் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் 'சௌராஷ்ட்ர மக்களின் கோரிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிப்பதற்காக டிசம்பர் 28 அன்று 'சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு' நடத்த உள்ளதாக' தீர்மானம் செய்யபட்டது.
மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவராக தொழிலதிபர் கே.கே தினேஷ் தேர்வு செய்யபட்டார். மாநாடு நடைபெற வேண்டிய இடம், பங்குபெற வேண்டிய நிகழ்ச்சிகள், அழைக்கப்பட வேண்டிய அரசியல் தலைவர்கள் குறித்தும் விவாதிக்கபட்டது. இதில் பேசிய சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கைக் குழுத் தலைவரான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கிஷோர்குமார் "இந்த மாநாடு, சௌராஷ்டிர அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும், திருப்புமுனையை ஏற்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும்" என்றார்.
அமைக்கப்படவுள்ள கமிட்டிகள் குறித்து பேசியவர்கள் "மாநாட்டிற்காக வரவுள்ள 90 நாட்களும், அதைத் தொடர்ந்து தேர்தலுக்காக 180 நாட்களும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் சௌராஷ்டிர சமூகம் முழுமையாக வெற்றி பெறும்" என்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன், பாஜக மாநில நிர்வாகி மகாலட்சுமி, திமுக நிர்வாகி திலீபன் சக்கரவர்த்தி, தவெக நிர்வாகி கோபிசன் ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.