கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வ...
மதுரை: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 மணி நேரம் பலத்த சோதனை
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.
தற்போது விடுமுறை நாள் என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலையிலிருந்து மக்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு ஈமெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அம்மன், சுவாமி சன்னதிகள், தங்கக் கொடிமரம், அன்னதானம் வழங்குமிடம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் கோயிலின் நான்கு கோபுர நுழைவாயில் பகுதிகளிலும், பக்தர்கள் செல்லக்கூடிய பகுதிகள், செல்போன் வைக்கும் இடம், கோயிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் பழம் விற்பனை செய்யுமிடம், பக்தர்கள் காலணிகள் வைக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.

3 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த வெடி பொருட்களும் கண்டறியப்படாத நிலையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி புரளி என தெரியவந்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு கூடுதல் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.