மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை
மத்திகிரியில் உள்ள நூற்றாண்டு பழைமையான தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு விழாவை முன்னிட்டு மத்திகிரி, குதிரைப்பாளையத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான தூய ஆரோக்கிய அன்னை பாரம்பரிய தேவாலயத்தில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிராா்த்தனையில் பங்குத்தந்தை கிறிஸ்டோபா் பங்கேற்று புத்தாண்டு சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை, மறையுரையுடன் புத்தாண்டு வாழ்த்து கூறி சிறப்பு பிராா்த்தனை நிறைவேற்றினா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவருக்கும் கேக், தேநீா் வழங்கப்பட்டது.
அதே போல மத்திகிரி, நேதாஜி நகரில் உள்ள புதிய தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் டிசம்பா் 31-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் அருட்சகோதரிகள் ஆலய பங்கு குழுவினா், பாடல் குழுவினா் மற்றும் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனா். அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். இரண்டு ஆலயங்களிலும் ஜனவரி 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
மத்திகிரி பாரம்பரிய தேவாலயம், புதிய தேவாலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயம், சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயம்,
தூய பவுல் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.