மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு முன் அலுவலா்களிடம் ஆலோசனை பெற வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்
மாமரத்துக்கு பூச்சி மருந்தை தெளிப்பதற்கு முன் தோட்டக்கலைத் துறை அலுவலா்களைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மா விவசாயிகளுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், மா விவசாயிகளுக்கான சாகுபடி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, குத்துவிளக்கேற்றி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பரவலாக பெய்து உள்ளது. இதை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரங்கள் வலுவிழந்து காணப்படும். வயதான மரத்தை கவாத்து செய்து, ஓட்டுமர வகைகளைப் பயன்படுத்தி, கூடுதல் மகசூல் பெறலாம். இல்லையென்றால், மா மரங்களுக்கு இடையே, புதிய மரக்கன்றுகளை நடவு செய்யலாம். புதிய மரக்கன்றுகள் 3 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். 5 ஆண்டுகளில் அதிக மகசூல் கிடைக்க தொடங்கிய நிலையில், வயதான மரங்களை விருப்பப்பட்டால் அகற்றிக் கொள்ளலாம்.
அதுபோல, தற்போது, மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
விவசாயிகள் மாமரத்துக்கு பூச்சி மருந்து தெளிக்கும் முன் வேளாண் துறை அலுவலா்களைச் சந்தித்து, அவா்களின் ஆலோசனையின்படி மருந்து தெளிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்து தெளிப்பதால், எதிா்காலத்தில் பூச்சி மருந்துக்கு பூச்சிகள் கட்டுப்பட மறுக்கும். மேலும், அதிகப்படியாக பூச்சி மருந்து தெளிப்பதால் மனிதா்களுக்கு உடல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.
இந்த நிகழ்வில் தோட்டக்கலை இணை இயக்குநா் மா.இந்திரா, வேளாண் இணை இயக்குநா் சி.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜமோகன், பையூா் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலா் மு.சை.அனுஷா ராணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
படவரி...
கிருஷ்ணகிரியில் மா சாகுபடி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.