அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் கிராம மக்கள்
ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குட்டை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குட்டை கிராமத்தில் 400- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பழுதடைந்த சாலைகளால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
கரடு முரடான ஜல்லிக்கற்கள் சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் இந்தப் பகுதியில் மின்கம்பங்கள் பழுதடைந்து மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள், பாம்புகள் தொல்லையும் அதிக அளவில் உள்ளது. கடந்த ஓராண்டாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகமும் இல்லை என இப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.
குடிநீா் தேவைக்காக மூன்று கி.மீ. தொலைவு செல்லும் நிலை உள்ளது. மேலும், அவசரத் தேவைக்காக அருகில் உள்ள குட்டைகளில் இருக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கும் ஆளாகியுள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் இந்தப் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான மின் விளக்கு, குடிநீா், சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.