மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோா் டிஜிட்டல் உயிா்வாழ் சான்று பெறலாம்
மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் அவரவா் வீடுகளிலேயே அஞ்சலா் மூலம் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் பெறலாம் என புதுக்கோட்டை கோட்டக் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் ராணுவத்தினா் அவரவா் வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை, அஞ்சலா்கள் மூலம் சமா்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
நேரில் சென்று உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரா்கள் பயோ மெட்ரிக், பேஸ் ரெக்கனிஷன் முறையைப் பயன்படுத்தி வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 அஞ்சலரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி அஞ்சலரிடம் ஆதாா், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்தால், ஒரு சில நிமிஷங்களில், டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். மேலும் விவரங்களை அறிய 89048 93642 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.