தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!
மயிலாடுதுறை படுகொலை சம்பவத்துக்கு முன்பகைதான் காரணம்: காவல்துறை விளக்கம்!
மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய சம்பவத்தில் முன்விரோதம்தான் காரணம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து வந்த ராஜ்குமார், தினேஷ் இருவருக்கும் இடையில் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இருவருக்கும் வெள்ளிக்கிழமையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இந்தத் தாக்குதலில் ராஜ்குமாரின் கூட்டாளிகளும் உடன்சேர்ந்து தாக்கினர். அவர்களின் தாக்குதலில் இருந்து தினேஷை காப்பாற்ற ஹரிஷ், ஹரிசக்தி என்ற இளைஞர்கள் முன்வந்தனர்.
ஹரிஷ் மற்றும் சக்தி இருவருக்கும் ராஜ்குமாருடன் எந்தவிதத் தொடர்புமில்லை. இந்த நிலையில் ஹரிஷ், சக்தி இருவரையும் ராஜ்குமார் கூட்டாளிகள் கத்தியால் குத்தி, தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை
சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காரணத்தால் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து, இளைஞர்களை கொலை செய்த ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இருப்பினும், சாராய வியாபாரிகளுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.