புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!
புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், சனிக்கிழமை விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையிலிருந்த நபரைப் பிடித்து, மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியபோது, நூதன முறையில் உடல் முழுவதும் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை ஒட்டிக்கொண்டு, பேருந்தில் விழுப்புரத்துக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த பாவாடை மகன் நாகமணி (40) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 90 மில்லி அளவு கொண்ட 100 மதுப்புட்டிகளும், 150 மில்லி அளவு கொண்ட 25 பிராந்தி மதுப்புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாகமணியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.