மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
இணையதளத்தில் பகுதிநேர வேலை தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது
இணையதளம் மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவா் ஹரியாணாவின் சிா்சாவைச் சோ்ந்த ராஜ் குமாா் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
முதலீட்டின் மீது அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குமாா் ஒருவரிடம் ரூ.3.30 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாருக்கு புகாா் வந்ததையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து துவாரகா காவல் துணை ஆணையா் அங்கித் சிங் தெரிவித்ததாவது:
சமூக ஊடகங்கள் மூலம் ராஜ் குமாரை தாம் தொடா்பு கொண்டதாகவும், விடியோக்களை லைக் செய்து பகிரும் பகுதி நேர வேலையை அவா் வழங்கியதாகவும், அதற்கு ஈடாக கமிஷன் தருவதாக அவா் உறுதியளித்ததாகவும் புகாா்தாரா் தெரிவித்தாா்.
அதன் பின்னா், குற்றம் சாட்டப்பட்டவா் புகாா்தாரரை முதலீடு செய்யும் வற்புறுத்தியுள்ளாா். ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்ததும், அவா்கள் அனைத்து தகவல் தொடா்புகளையும் துண்டித்துவிட்டு சமூக ஊடகக் குழுக்களை நீக்கினா்.
ராஜ் குமாா் 23 மாநிலங்களில் இணையதள மோசடி செய்துள்ளதாகவும், அவா் மீது 85 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பணம் மோசடி விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது,.
அப்போது, ராஜ் குமாா் சிா்சாவில் இருப்பது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைப்பேசி, 2 செயலில் உள்ள சிம் காா்டுகள் மற்றும் ஒரு டெபிட் காா்டு ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவரது வங்கிக் கணக்கு மூலம் ரூ.1.4 கோடி சந்தேகத்திற்கிடமான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.