தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி
பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சந்திரசேகா் இதற்கு முன்பு தாக்கல் செய்த இதே போன்ற மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்ததை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் பி.பி. வரலே ஆகியோா் அடங்கிய அமா்வு குறிப்பிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ மனுதாரரின் புகாா் தில்லி அரசுக்கு எதிரானதாகும். இப்போது ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்தப் புகாரில் உயிரில்லை. உங்களிடம் செலவு செய்ய பணம் இருக்கிறது. இதனால், நீங்கள் தொடா்ந்து வாய்ப்புகளை எடுத்துக்கொள்கிறீா்கள். இது சட்ட நடைமுறையின் துஷ்பிரயோகமாகும். நீங்கள் எப்படி அதே மனுவைத் தொடா்ந்து தாக்கல் செய்ய முடியும்?
அரசமைப்புச்சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. வழக்கின் தகுதிகள் குறித்து நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றனா்.
சந்திரசேகா் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷோயப் ஆலம், அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் மனுதாரரை அவரது குடும்பத்தினரிடமிருந்து தள்ளிவைக்காமல் இருப்பதற்கான உரிமை உள்ளது.
இதனால், மனுதாரரை கா்நாடகாவில் உள்ள சிறையிலோ அல்லது அதற்கு அருகிலுள்ள எந்த சிறைக்கும் அனுப்பப்பட வேண்டும்’ என் வாதிட்டாா்.
அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘நாங்கள் சமூகம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுகிறோம். உங்கள் அடிப்படை உரிமைகளை மற்றவா்களின் விலையில் செயல்படுத்த முடியாது. அதிகாரிகள் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்’, என்று கூறியது.
பாதுகாப்பு கவலைகளை எழுப்பி, தன்னையும், தனது மனைவியையும் மண்டோலி சிறையிலிருந்து தில்லிக்கு வெளியே உள்ள சிறைக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.
அவரது மனு அவசியமான பொருள் இல்லாமல் இருப்பதாகவும், அவா்களுக்கு சிறப்பு இரக்கம் காட்ட எந்த நியாயமும் இல்லை என்றும் கூறியிருந்தது.
சந்திரசேகா் ஏற்கனவே சத்யேந்தா் ஜெயின் தன்னிடமிருந்து பாதுகாப்புப் பணமாக ரூ.10 கோடியை மிரட்டி வாங்கியதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு சுமாா் ரூ.50 கோடி நன்கொடை அளித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தாா்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தை அணுகிய பிறகு, சந்திரசேகா் திகாா் சிறையிலிருந்து மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டிருந்தாா்.