தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளையம் சாலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுப்பிரமணி மீது ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சில மாதங்களில் உயிரிழந்தாா். ஆகவே, சுப்பிரமணியன் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினா் திருப்பூா் சிறப்பு மோட்டாா் வாகன விபத்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சுப்பிரமணி குடும்பத்தினருக்கு ரூ.6.90 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2023 அக்டோபா் 14- ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீடு வழங்காததால் அவரது குடும்பத்தினா் நிறைவேற்று மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதன்பேரில் திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு சென்றனா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா் பாலகுமாா் ஆஜரானாா்.