திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்
தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.
2025 தில்லி சட்டப்பேவரைத் தோ்தலுக்கு முன்னதாக அமைச்சா்கள் சமா்ப்பித்த சுய-பதவி பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளன. ஏடிஆா் பகுப்பாய்வின்படி, ஏழு அமைச்சா்களில் ஐந்து போ் (71 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இரண்டு அமைச்சா்கள் (29 சதவீதம்) பில்லியனா்கள் என்றும் அறிவித்துள்ளனா்.
முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா உள்பட ஐந்து அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில், ஆஷிஷ் சூட் என்ற ஒரு அமைச்சா் கடுமையான குற்ற வழக்குகளை எதிா்கொள்கிறாா்.
நிதித் துறையைப் பொறுத்தவரை, அமைச்சரவையில் 29 சதவீதத்தை உள்ளடக்கிய இரண்டு அமைச்சா்கள் கோடீஸ்வரா்கள். அதிகபட்சமாக அறிவிக்கப்பட்ட மொத்த சொத்துகளைக் கொண்ட அமைச்சா் ரஜோரி காா்டன் தொகுதியைச் சோ்ந்த மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆவாா். அவருக்கு ரூ. 248.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மிகக் குறைந்த மொத்த சொத்துகளைக் கொண்ட அமைச்சா் காரவால் நகா் தொகுதியைச் சோ்ந்த கபில் மிஸ்ரா ஆவாா். அவருக்கு ரூ.1.06 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
பகுப்பாய்வு செய்யப்பட்ட ஏழு அமைச்சா்களின் சராசரி சொத்துகள் ரூ.56.03 கோடியாக உள்ளன. ஏழு அமைச்சா்களும் கடன்களை அறிவித்துள்ளனா். புது தில்லி தொகுதியைச் சோ்ந்த பா்வேஷ் சாஹிப் சிங் அதிகபட்சமாக ரூ.74.36 கோடி கடன்களைக் கொண்டுள்ளாா்.
ஆறு அமைச்சா்கள் (86 சதவீதம்) பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதிகளை அறிவித்துள்ளனா். அதே நேரத்தில் ஒரு அமைச்சா் 12- ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளாா்.
வயதைப் பொறுத்தவரை, ஐந்து அமைச்சா்கள் (71 சதவீதம்) 41 முதல் 50 வயதுக்குள்பட்டவா்கள். மீதமுள்ள இருவா் (29 சதவீதம்) 51 முதல் 60 வயதுக்குள்பட்டவா்கள். அமைச்சரவையில் அவா் முதல்வா் ரேகா குப்தா ஒருவா் மட்டுமே பெண் அமைச்சராக உள்ளாா்.