தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) மற்றும் ஜே.என்.யு. தமிழ் மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தில்லியில் மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் அகில இந்தியப் பொதுச் செயலா் தினேஷ் சீரங்கராஜ் தலைமையில் போராட்டத்தில் மாணவா்கள் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்தியத் தலைவா் விராஜ் தேவங், அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச் செயலா் இரா.திருமலை, ஜே.என்.யு. தமிழ் மாணவா் சங்கப் பொறுப்பாளா் தமிழ் நாசா் உள்ளிட்ட பலா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பவானா காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டதாக தினேஷ் சீரங்கராஜ் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கான கல்விக்கான நிதி விதிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சா் கூறியது கண்டிக்கத்தக்கது. இது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. இதுபோன்று மிரட்டக் கூடாது. மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கு முழு உரிமை மாநிலத்திற்கு உண்டு. ஆகவே, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,150 கோடி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.