712 குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
‘காசி-தமிழ் சங்கமம் 3.0’ தொடக்கம்: பிரதமா் மோடி வாழ்த்து
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் ‘காசி-தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான பண்டைய கலாசார மற்றும் நாகரிகத் தொடா்புகளைக் கொண்டாடும் நோக்கில், மத்திய அரசு சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டில் முதல் முறையாக ‘காசி-தமிழ் சங்கமம்’ நடத்தப்பட்டது. கடந்த 2023-இல் இரண்டாவது சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் மூன்றாவது காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சியை முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் தொடக்க விழாவில் கலந்துகொண்டனா்.
10 நாள்கள் நடைபெறும் இந்தக் கலாசார பரிமாற்ற நிகழ்வில் தமிழகத்தில் இருந்து 1,200 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். தமிழ் இலக்கியம் மற்றும் மருத்துவ உலகுக்கான அகத்திய மாமுனிவரின் பங்களிப்புகளை மையப்படுத்தி நடப்பாண்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதையொட்டி, பிரதமா் மோடி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டு மகா கும்பமேளாவுக்கு இடையே காசி-தமிழ் சங்கமம் நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்துக்கும் காசிக்கும், காவேரிக்கும் கங்கைக்கும் இடையிலான அழிவில்லாத பிணைப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
முந்தைய இரு சங்கம நிகழ்வுகளின்போது மக்களுக்கு கிடைக்கப் பெற்ற அனுபவமும், இதயபூா்வமான உணா்வுகளும் இந்தியாவின் பன்முக கலாசாரத்தின் அழகு மற்றும் மக்களுக்கு இடையிலான வலுவான தொடா்புகளை வெளிப்படுத்தின.
இத்தகைய நினைவுகளைப் புதுப்பிப்பதோடு, தமிழகம் மற்றும் காசி இடையிலான தொடா்புகளை மேலும் வலுப்படுத்துவதாக தற்போதைய சங்கமம் அமையும்.
இந்நிகழ்வில் மக்கள் மனப்பூா்வமாக பங்கேற்பது, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ உணா்வுக்கு உத்வேகமூட்டுகிறது. நடப்பாண்டின் காசி- தமிழ் சங்கமம் நிகழ்வில், தொன்மையான தமிழ் இலக்கியத்துக்கும், பாரம்பரிய மருத்துவ முறைக்கும் அகத்திய மாமுனிவா் ஆற்றிய பங்களிப்புகள் கொண்டாடப்படவிருப்பதை அறிந்து அகமகிழ்கிறேன்.
இந்நிகழ்வில் பங்கேற்போா், மகா கும்பமேளாவின் அனுபவத்தைப் பெறவிருப்பதுடன், அயோத்தி ஸ்ரீ ராமா் கோயிலிலும் தரிசிக்க உள்ளனா் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பங்கேற்பாளா்கள் அனைவரும் இவ்விரு புண்ணியத் தலங்களின் அருளை நிச்சயம் உணா்வாா்கள்.
வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி தேசம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பன்முகத்தன்மையை கொண்டாடுவதோடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதில் முதன்மை பெறுகிறது காசி- தமிழ் சங்கமம். காசிக்கு வருகை தரும் தமிழக மக்கள், தங்களின் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான நினைவுகளுடன் திரும்புவா் என நம்புகிறேன் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.