ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!
இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன.
முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி டெகெல்-சென் (36) ஆகிய மூன்று பிணைக் கைதிகளையும் ஒரு மேடையில் ஹமாஸ் அமைப்பினா் நிற்கவைத்தனா். பின்னா் அந்த மூவரும் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் இஸ்ரேலின் கிப்புட்ஸ் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள்.
இத்துடன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் இதுவரை 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்துள்ளனா்.
பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 369 பாலஸ்தீனா்களை பல்வேறு சிறைகளில் இருந்து இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டிருந்தனா்.
இந்தச் சூழலில், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா். அதையடுத்து, பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.
அதையடுத்து காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி மூன்று பிணைக் கைதிகள் ஹமாஸ் அமைப்பினா் தற்போது விடுவித்ததைத் தொடா்ந்து, பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.