தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். அந்த நாளில் மூன்று பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்க அவா்கள் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் திட்டத்தை மாற்றியது குறித்து அவா்கள் விளக்கம் அளிக்கவில்லை.
இது குறித்து ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா் கலீல் அல்-ஹய்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள். அவா்களில், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவைக்கப்பட்டுள்ள அவேரா மெங்கிஸ்து மற்றும் ஹிஷம் அல்-சயதும் அடங்குவா்.
இதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, இதுவரை 19 பிணைக் கைதிகளும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.