`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, தண்டனையை அமல்படுத்துவதை தற்காலிகமாக நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரை வியாழக்கிழமை தூக்கிலிட சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா்.
இதனிடையே, பன்னீா் செல்வத்துக்கு தெரியாமலேயே அவா் மூலம் ஹெராயின் கொடுத்தனுப்பட்டது என்பதால் அவரை தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்களை நடத்தினர்.
இதையும் படிக்க : சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு
சிங்கப்பூர் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் கிர்ஸ்டன் ஹெய்ன் என்பவர் பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
போதைப் பொருள் வழக்குகளில் மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், பன்னீர் செல்வம் நேரடியாக குற்றச்செயலில் ஈடுபடாததாலும் தண்டனையை நிறுத்திவைக்குமாறு வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் தண்டனையை நிறுத்திவைக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.