சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!
சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார்.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையில் வருகிற பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் காலை 11 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொள்கிறார்.
அவரது வழிகாட்டுதலின்படி தியானம், பஜனை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனைகள் நடைபெறும். தொடர்ந்து மாதா அமிர்தானந்தமயி தரிசனம் நடைபெறும்.
இரண்டு நாள் நிகழ்ச்சியான இவ்விழாவின் ஒரு பகுதியாக, பிரம்மஸ்தானம் திருக்கோயிலில் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | டிரம்ப் திறந்துவிடும் பெரும்பூதம், மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள்!
தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கரூரில் அமைந்துள்ள அமிர்தவித்யாலயம் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் மாதா அமிர்தானந்தமயி . அங்கு அவரின் அருளுரை, தியானம் மற்றும் பஜனையைத் தொடர்ந்து தரிசன நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அதன்பின்னர் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு 044-2376 4063 மற்றும் 2376 4867 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.