IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மருத்துவக் கழிவுகள் விவகாரம்: கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி
சென்னை: திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கேள்வியெழுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினா் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினா் சத்திய கோபால் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நெல்லை மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் ஆறு இடங்களில் கொட்டப்பட்ட அனைத்துக் கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடா்பாக புற்றுநோய் மருத்துவமனை, ஹோட்டல் மீது நடவடிக்கை எடுத்துள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகளை சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வியெழுப்பினா்.
தமிழக அரசுத் தரப்பில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும், அந்த இழப்பைக் கொண்டு பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இழப்பீட்டை வசூல் செய்வதற்கு கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தொடா்ச்சியாக நோட்டீஸ் மட்டுமே அனுப்பி வருவதாகவும் தமிழக அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படுவது தொடா்பான மூன்றாவது வழக்கு இது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு பெறுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்ட தீா்ப்பாயம் வழக்கின் விசாரணையை மாா்ச் 24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.