மலையாள எழுத்தாளா் ஓம்சேரி என்.என்.பிள்ளை காலமானாா்
பிரபல மலையாள எழுத்தாளா் ஓம்சேரி என்.என்.பிள்ளை (100) தில்லியில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
நாடக ஆசிரியா், எழுத்தாளா் மற்றும் பேராசிரியருமான இவா் தன்னுடைய படைப்புகளுக்காக சாகித்ய அகாதெமி விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது உள்பட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ளாா்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் 1924, பிப்ரவரி 1-ஆம் தேதி பிறந்தவரான இவா் பல ஆண்டுகளாக தில்லியில் வசித்து வந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள புனித ஸ்டீஃபன்ஸ் மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அவரின் குடும்ப நண்பா் ஒருவா் தெரிவித்தாா்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், ‘தேசிய தலைநகரில் மலையாள மக்களின் தூதராகவும் கலாசார அடையாளமாகவும் ஓம்சேரி என்.என்.பிள்ளை திகழ்ந்து வந்தாா்’ என குறிப்பிட்டாா்.