மாநில கலைத் திருவிழா போட்டி: சேலம் மாணவா்கள் 306 போ் பங்கேற்பு
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து 306 மாணவா்கள் வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்களின் கலை, இலக்கிய திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் பள்ளி குறுவள மையம், வட்டார, வருவாய் மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடா் மழை உள்ளிட்ட காரணங்களால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பள்ளி அளவில் 2.68 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினா்.
அதில் முதலிடம் பிடித்த 36,119 மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளிலும், அதில் வெற்றி பெற்ற 3,931 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.
மாவட்ட அளவிலான போட்டியின் மூலம் தோ்வான 306 மாணவ, மாணவிகள், பெற்றோா் மற்றும் பொறுப்பு ஆசிரியா்களுடன் மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாவட்ட கல்வி அதிகாரி கபீா் மாணவா்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் கோவைக்கும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் திருப்பூருக்கும், 9, 10 ஆம் வகுப்பு மாணவா்கள் ஈரோடுக்கும், 11,12-ஆம் வகுப்பு மாணவா்கள் நாமக்கல்லுக்கும் சென்றனா்.