வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்த...
மாரத்தான் ஓடும்போதே மரணம்; வராமல் தடுக்க முடியும்! - இதய மருத்துவரின் டேக் கேர் அட்வைஸ்!
உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது சிலர் ஹார்ட் அட்டாக் வந்து இறப்பதை அவ்வப்போது பார்க்கிறோம். அக்டோபர் 5-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் மாரத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கையில் சுருண்டு விழுந்து மரணமடைந்திருக்கிறார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், கடந்த 5-ம் தேதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 24 வயதான பரமேஷ் என்பவரும் கலந்துகொண்டிருக்கிறார்.
இவருக்கு ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டென்றும், அதனால் ஏற்கெனவே பல மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முறை ஓடிக்கொண்டிருக்கும்போது சுருண்டு விழுந்திருக்கிறார்.
மருத்துவ உதவிக்காக, மாரத்தான் ஓடியவர்களை ஆம்புலன்சில் பின்தொடர்ந்த மருத்துவ ஊழியர்கள், உடனடியாக பரமேஷுக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னரே பரமேஷ் இறந்துவிட்டிருக்கிறார்.
இளம் வயதினரான பரமேஷ் மரணத்துக்கு எவை காரணங்களாக இருந்திருக்கலாம் என சென்னையைச் சேர்ந்த மூத்த இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம் அவர்களிடம் கேட்டோம்.
''சில நாள்களுக்கு முன்னால்தான், கனடா, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்குச் சென்று வந்தேன். இந்தியா உள்பட இந்த நாடுகளில் எல்லாம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் ஹார்ட் அட்டாக்கால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
உலகளவில், ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் இள வயதில் ஹார்ட் அட்டாக்கால் மரணமடைகிறார்கள். இதில் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் இல்லை.

என்னுடைய அறுபது வருட மருத்துவ அனுபவத்தில், 80 அல்லது 70 வயதில் வந்த ஹார்ட் அட்டாக் 50, 40 என முன்கூட்டியே வந்து இப்போது 30, 20 என வந்து நிற்கிறது.
ஆனாலும், இதற்காகப் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், சிறு வயது ஹார்ட் அட்டாக்கை நிச்சயம் தடுக்க முடியும்'' என்றவர், தொடர்ந்தார்.
''ரத்தத்தில் இருக்கிற மொத்த கொலஸ்ட்ராலை எடுக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்த நொடி நம் உயிர் போய்விடும். அந்தளவுக்கு கொலஸ்ட்ரால் நமக்குத் தேவையான ஒன்று.
அதனால், கொலஸ்ட்ரால் குறித்து அச்சம்கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறபட்சத்தில் இந்த கொலஸ்ட்ரால் ரத்தத்தில் மட்டும் இருந்து உங்களை 100 வயது வரைகூட வாழ வைக்கும்.

இதயத்தில் இருக்கிற ரத்தக்குழாய்களில் 70 முதல் 80 சதவிகிதம் கொழுப்புப் படிந்து, அவை ரத்தக்குழாய்களை முழுமையாக அடைப்பதற்கு குறைந்தது 20 அல்லது 25 வருடங்கள் ஆகும்.
அதற்குள் நம்முடைய உணவையும் லைஃப் ஸ்டைலையும் ஹெல்த்தியாக மாற்றிக்கொண்டீர்கள் என்றால், இதயத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது.
மகிழ்ச்சியை இழக்கும்போது அட்ரினலில் இருந்து கார்டிசால் சுரக்க ஆரம்பிக்கும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன். இதனால், இதய ரத்தக்குழாய்களுக்குள் கொலஸ்ட்ரால் படிந்து ரத்தக்குழாய்கள் தடிமனாகும்.
இப்படி கொலஸ்ட்ரால் படிவது 80 சதவிகிதம் ஆகிற வரைக்கும்கூட எந்த அறிகுறியும் தெரியாது. ஈசிஜி, எக்கோ, ட்ரெட் மில் டெஸ்ட் எல்லாமே நார்மலாக இருக்கும். இந்தப் பிரச்னையை Atherosclerosis என்போம். அதனால், மகிழ்ச்சியாக இருங்கள்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோ அல்லது மாரத்தானில் ஓடுவதோ, அதை நம் மகிழ்ச்சிக்காக செய்ய வேண்டும். அப்போதுதான் எண்டார்பின் என்கிற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். இது ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலை படிய விடாது.
இதுவே ஆத்திரத்துடன், ஆவேசத்துடன், அவசரத்துடன், ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியுடன் உடற்பயிற்சி செய்தால்... மாரத்தான் ஓடினால்... கார்டிசால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் என்ன நடக்கும் தெரியுமா?
இதய ரத்தக் குழாய்களுக்குள் மட்டுமல்ல, உடலிலுள்ள எல்லா ரத்தக்குழாய்களுக்குள்ளும் மென்மையான லைனிங் இருக்கும். இதை எண்டோத்தீலியம் என்போம்.
கார்டிசால் சுரக்கும்போது, இந்த எண்டோத்தீலியத்தில் சிறியதாக கீறல் விழும். உடனே அந்த இடத்தில் ரத்தம் உறைய ஆரம்பித்துவிடும்.
இது இதய ரத்தக்குழாய்க்குள் ரத்த ஓட்டத்தை தடுத்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட நபருக்கு 2 நிமிடத்தில் ஹார்ட் அட்டாக் வந்து விடும். அதனால், மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும்படி வாழுங்கள்.
20-களிலேயே ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ஈசிஜி, எக்கோ ஆகிய 5 பரிசோதனைகளை 5 வருடத்துக்கு ஒருமுறை 40 வயது வரை செய்துகொள்ள வேண்டும்.
அதன்பிறகு 50 வயது வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
அதன்பிறகு வருடா வருடம் செய்ய வேண்டும். குறிப்பாக, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு மூன்றும் ஒரு நபரை சத்தமில்லாமல் கொன்றுவிடும்.
முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்துவிட முடியும். மாரத்தான் ஓடியவருக்கு மேலே சொன்ன பிரச்னைகள் இருந்தனவா என்று தெரியவில்லை.
தவிர, சிலருக்கு இதயத்தின் தசைச் சுவர்களில் இடது வென்ட்ரிக்கிள் தடிமனாகிவிடும். சிலருக்கு, பிறவிலேயே இதய ரத்தக்குழாய்களுக்குள் ஏதேனும் இயல்புக்கு மாறான மாற்றங்கள் இருந்திருக்கலாம்.
இவை தெரியாமல், தீவிரமாக உடற்பயிற்சி செய்தலோ அல்லது ஓடினாலோ இவர்களுக்கும் இதுபோல திடீரென அட்டாக் வரலாம். ஹார்ட் அட்டாக்குக்கு முந்தைய வலியை வாயுத்தொல்லை என்றுகூட இவர் அலட்சியப்படுத்தியிருக்கலாம்.
மகிழ்ச்சியாக இருங்கள்; 8 மணி நேரம் தூங்குங்கள்; உங்கள் உடல் நலத்தில் அக்கறையாக இருங்கள்; எதையோ சாதிக்க வேண்டும் என ஓடி உங்கள் உயிரையே இழந்துவிடாதீர்கள்'' என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.