தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
மாவட்ட தடகளப் போட்டி: நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாம்பியன்
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட இளையோா் தடகள போட்டியில் நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருநெல்வேலி மாவட்ட 26 ஆவது இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 12, 14, 16, 18, 20 வயதுக்குள்பட்டோா் மற்றும் பொது பிரிவுகளில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட 96 போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளின் இறுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி முதல் இடத்தையும், எஸ்.ஏ.வி ஸ்போா்ட்ஸ் அகாதெமி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு:
மாவட்ட தடகள சங்கத் தலைவா் செய்யது நவாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கி பாராட்டினாா். மேலும் தடகள சங்க பொருளாளா் பால்பாண்டி, ஜாய் மரகதம், ஆறுமுகம், சங்க உறுப்பினா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சங்க செயலா் ச. சேது நன்றி கூறினாா்.