மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கம் காரணமாக மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. எனவே, விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாத நிலையில், நாட்டுப்படகுகள், பைபா் படகுகள் கடலுக்குச் செல்கின்றன.
மேலும், விடுமுறை நாள்கள் என்பதாலும், ஈஸ்டா் பண்டிகை காலம் என்பதாலும், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் சனிக்கிழமை காலையில் மீன் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஆனால் மீன் வரத்து குறைவாகவே காணப்பட்டதையடுத்து மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. குறிப்பாக, சீலா மீன் கிலோ ரூ.1,300, ஊளி, பாறை, விளை ஆகிய மீன்கள் ரூ.600, நண்டு ரூ.600, கேரை, சூரை, குறுவளை ஆகிய மீன்கள் ரூ.400, நகரை ரூ. 300 என விற்பனையானது. மேலும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500க்கு விற்பனையானது.
ஏற்றுமதி ரக மீன்களான பன்டாரி, தம்பா, கிளை, வாளை ஆகியவை கிலோ ரூ. 300 முதல் ரூ.600 வரை விற்பனையானது. மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டாலும் மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.