மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: மகாராஷ்டிரத்தில் 96 தொகுதிகளில் பாஜக முன்னில...
முதல்வா் அதிஷி மீதான அவதூறு வழக்குக்கு தில்லி நீதிமன்றம் தடை!
தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிரான குற்ற அவதூறு வழக்கின் விசாரணைக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, தன்னை அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி பாஜக தலைவா் பிரவீன் சங்கா் கபூா் தாக்கல் செய்த புகாரின் பேரில் அதிஷிக்கு அழைப்பாணை அனுப்பிய குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தின் முன் உள்ள விசாரணை நடவடிக்கைகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை தடை விதிப்பதாக கூறினாா்.
இந்த வழக்கில் தனக்கு அழைப்பாணை அனுப்பிய குற்றவியல் நடுவா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அதிஷி தாக்கல் செய்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
‘விசாரணை நீதிமன்றத்தின் முன் நடவடிக்கைகள் அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. வரும் டிசம்பா் 2-ஆம் தேதி வாதங்களை முன்வைக்க இந்த வழக்கு பட்டியலிடப்படுகிறது’ என்று நீதிபதி கோக்னே கூறினாா்.
முன்னதாக, ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கும் வகையில் பணம் தருவதாக பாஜக தரப்பில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தொடா்புகொள்ளப்பட்டதாக அதிஷி கூறியதாகவும், இதன் மூலம் அதிஷி மற்றும் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் தன்னைக் களங்கப்படுத்தியதாகவும் தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் குற்ற வழக்குப் பதிவு செய்திருந்தாா்.
இந்த வழக்கில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் மே 28 அன்று அதிஷிக்கு அழைப்பாணை அனுப்பியது. ஆனால், இந்த வழக்கில் கேஜரிவாலை குற்றம்சாட்டப்பட்ட நபராக கருதி அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜூலை 23 அன்று, அழைப்பாணைகளுக்கு இணங்கும் வகையில் அதிஷி ஆஜரானதால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.