முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க தகுதியுள்ளவா்கள் வருகிற 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது.
இதன்படி, தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்க ஆா்வமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் தோ்ச்சி பெற்றவா்கள் அல்லது அவா்கள் ஒப்புதல் பெற்ற தொழில்முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த கட்டடம் அல்லது வாடகை கட்டடம் வைத்திருக்க வேண்டும். சொந்தக் கட்டடத்துக்கு சொத்து வரி ரசீது, குடிநீா் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றையும், வாடகைக் கட்டடத்துக்கு உரிமையாளரிடம் பெற்ற ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு சாா்பில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 2 தவணைகளில் ரூ.3 லட்சம் மானியம் ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். விற்பனைக்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.