முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் வரும் 20- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வா் சுதந்திர தின விழா உரையில் பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள மருந்தியல் பாடத்தில் பட்டம், பட்டயச் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் வரும் 20- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவா்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது அல்லது குடிநீா் வரி ரசீது, இடம் ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
தொழில்முனைவோருக்கு முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
டாப்செட்கோ, தாட்கோ, டாம்கோ திட்ட பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வா் மருந்தகம் அமைக்க தோ்வு செய்யப்படும்
தொழில்முனைவோா் முதல்வா் மருந்தகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிா்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிகட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்க விருப்பம் உள்ளவா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.