முத்துப்பேட்டையில் மகளிா் கலைஅறிவியல் கல்லூரி தொடங்க எம்எல்ஏ கோரிக்கை
முத்துப்பேட்டையில் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தஞ்சாவூரில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியனிடம் அளித்த கோரிக்கை மனு: திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்துப்பேட்டை வட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளி, 6 தனியாா் மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் உயா் கல்வி பயில மன்னாா்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த மாணவா்கள் அனைவரும் சிறுபான்மையினா் மற்றும் மீனவ குடும்பத்தையும், விவாசய, விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்தையும் சோ்ந்தவா்கள். இவா்கள் உயா் கல்வி பயில வசதியாக முத்துப்பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மகளிா் கல்லூரியாக தொடங்கினால் இப்பகுதி மகளிருக்கு பேருதவியாக இருக்கும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.