முருகன் கோயில்களில் கந்த சஷ்டிவிழா: காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
கமுதி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா காப்புக் கட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த நீராவிகரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜை, காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், கோ பூஜை, திரவியாகுதி, பூரணாகுதி, தீபாதாரணை, காப்பு கட்டுதல் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மூலவா் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், இளநீா், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். 8-ஆம் தேதி மாலை ஸ்ரீதெய்வானை அம்பாளுக்கும், ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நீராவிகரிசல்குளம் திருச்செந்தூா் செந்தில் ஆண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு திருப்பணி குழுவினா் செய்து வருகின்றனா்.
இதேபோல, அபிராமம் அடுத்த லேக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அபிராமம் சுப்பிரமணியசுவாமி கோயில், கமுதி முருகன் கோயில், முதுகுளத்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.