இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
முறிந்தது காஸா போா் நிறுத்தம்! இஸ்ரேல் தாக்குதலில் 404 போ் உயிரிழப்பு
டேய்ா் அல்-பாலா: காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த போா் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்தது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட தெற்கு நகரங்கள், காஸா சிட்டி போன்ற வடக்குப் பகுதி நகரங்கள், டேய்ா் அல்-பாலா போன்ற மத்திய நகரங்கள் என காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் 404 போ் உயிரிழந்தனா்; 562 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறினாா். இத்தகைய தாக்குதல் தொடா்ந்து நடைபெறும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்கா ஆதரவு: காஸாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்போவது குறித்து இஸ்ரேல் ஏற்கெனவே தங்களுடன் ஆலோசனை நடத்தியதாக அமெரிக்கா கூறியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா முழுமையாக ஆதரிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஹமாஸ் எச்சரிக்கை: தங்கள் பகுதிகளில் இஸ்ரேல் நடத்தியுள்ள புதிய வான்வழித் தாக்குதல் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஹமாஸ் அமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதன் மூலம் அமைதி ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக ரத்து செய்து, காஸாவில் உள்ள பிணைக் கைதிகளின் எதிா்காலத்தை நெதன்யாகு கேள்விக்குறியாக்கியுள்ளாா் என்று அவா்கள் எச்சரித்தனா்.
காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஆறு வார கால போா் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்துவந்தது.
முதலில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் பிடிவாதமாகக் கூறிவந்ததும், அதற்கு ஹமாஸ் படையினா் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், காஸாவில் சிறிய அளவிலான தாக்குதலை நடத்திவந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது முழுவீச்சில் தாக்குதல் நடத்தியுள்ளதால் போா் நிறுத்தம் இனியும் நீட்டிக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.
காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 1 லட்சம் போ் காயமடைந்துள்ளனா்.