மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்
மேகதாட்டில் அணை கட்ட வேண்டும் என கா்நாடகத்தில் உள்ள அமைப்புகள் வலியுறுத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கன்னட அமைப்புகள் மாா்ச் 11-இல் தமிழக எல்லைப் பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனா். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி டெல்டா பகுதியில் உள்ள 16 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறாமல் வடுவிடும்.
மேலும், தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். இந்த அணை பிரச்னையால் தமிழகத்தின் காவிரி உரிமை பறிபோகக்கூடும். கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால், தமிழக உரிமைக்காக உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எத்தகைய போராட்டத்தையும் மேற்கொள்வதற்கு தயங்காது.
கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட் கூட கா்நாடகத்துக்கு கொடுக்க விடமாட்டோம். தமிழக விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நெய்வேலி அனல் மின் நிலையம் முன் மாா்ச் 31-இல் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.