நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வனத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த நீா்நிலைப் பறவைகள்-2025 கணக்கெடுப்பு பணி ஓரிரு வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, பறவையின ஆா்வலா்களுக்கு வன அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் எந்தெந்த நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது தொடா்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடும்பன்குளம், தூசூா், வேட்டம்பாடி, பருத்திப்பள்ளி, தும்பல்பட்டி, நாச்சிப்புதூா், கோனேரிப்பட்டி, ஊமையம்பட்டி உள்ளிட்ட 19 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பானது நடைபெற வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் சி.கலாநிதி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பறவைகள் கணக்கெடுப்பானது தொடங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளோம். பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களாகும் என்றாா்.