தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் - சிரமத்தில் மக்கள்!
நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. எனினும், இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 5 கி.மீ வரை சுற்றிச் செல்ல வேண்டிய சிரமமான சூழல் நிலவுகிறது. மேலும் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் வந்து பேசிய 'சமூக ஆர்வலர்கள்', ``தினந்தோறும் பணிக்குச் செல்லக் கூடியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக் கூடியவர்கள் என அனைவரும் பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. எனவே, துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலத்தைத் திறந்து வைத்தால், அனைவரும் பயனடைவார்கள்" என்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது, ``இந்த மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது . இதுதான் இப்படி என்று பார்த்தால், திறப்பதற்கும் இதே நிலைமைதான் போல. ஆரம்பத்தில் ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று கொண்டிருந்தோம். வேலைக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாது. பிள்ளைகளையும் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல மிகவும் சிரமமாக இருக்கும். பின்னர் மேம்பாலம் கட்டுகிறோம் என்று இந்த வழியை முழுமையாக அடைத்து விட்டார்கள். தினமும் 5 கி.மீ வரை சுற்றிக் கொண்டுதான் எங்கள் ஊருக்குச் செல்வோம். பெட்ரோல் விற்கும் விலைவாசிக்கு, சமாளிக்க முடியவில்லை. மேம்பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுத்தால், இந்தப் பகுதியின் போக்குவரத்து வசதி மேம்படும்" என்றனர்.

மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் இருப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ``ஒரு சில நிர்வாக காரணங்களால் மேம்பாலம் திறப்பதற்குச் சற்று தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கிறோம்" என்றனர்.