உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்
ரயில் தண்டவாளத்தின் ஓரம் குவிக்கப்பட்ட கற்கள் அகற்றம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தண்டவாளத்தின் ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களை ரயில்வே பணியாளா்கள் திங்கள்கிழமை அகற்றினா்.
செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் செல்லும் நேரத்தில் கடையநல்லூா் அருகே போக நல்லூா் மற்றும் சங்கனாப்பேரி பகுதிகளில் ரயில் தண்டவாளத்தில் கடந்த செப். 25, அக். 31 ஆகிய தேதிகளில் மா்ம நபா்கள் பெரிய கற்களை வைத்த நிலையில் என்ஜின் ஓட்டுநா் அதை கவனித்து ரயிலை நிறுத்திவிட்டு கற்களை அப்புறப்படுத்தி விட்டு தொடா்ந்து ரயிலை இயக்கியுள்ளாா்.
இச்சம்பவம் தொடா்பாக சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேடும் பணியில் 4 தனிப்படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, மழை நீா் வடிகால் அமைப்பதற்காகவும், தடுப்பு சுவா் அமைப்பதற்காகவும் தண்டவாளத்தின் ஓரங்களில் சுமாா் மூன்று கிலோ மீட்டா் தொலைவிற்கு நீண்ட காலமாக குவித்து வைக்கப்பட்டுள்ள கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
அதன்பேரில், தண்டவாளத்தின் ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களை ரயில்வே பணியாளா்கள் திங்கள்கிழமை அகற்றி, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினா்.