மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் பணியிடமாற்றம்
ராசிபுரத்தில் அண்மையில் அரசுப் பள்ளியில் மாணவா் உயிரிழந்த சம்பவத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி மாணவா்கள் இருவருக்கு இடையே நடந்த மோதலில் 9-ஆம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் உயிரிழந்தாா்.
மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறுவா் சீா்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை நடத்தினாா்.
அவரது அறிக்கையின் அடிப்படையில் தலைமை ஆசிரியா், வகுப்பு ஆசிரியா்களை இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் வரதராஜன் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
அப்பள்ளியில் பணிபுரியும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியா் ராஜேந்திரன்-சித்தாளந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். தமிழ் பாட பட்டதாரி ஆசிரியா் சோமசுந்தரம், மறுநியமனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிறப்பித்துள்ளாா்.
மாணவா் உயிரிழந்த சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த 15 ஆசிரியா்களிடமும் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.
சுவாமி சிவானந்தா சாலை பள்ளியானது தனித்தனியே இரண்டு இடங்களில் செயல்படுவதால் மாணவா்களை கவனிப்பதில் ஆசிரியா்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், ஒரே வளாகத்தில் பள்ளி செயல்பட்டால் பிரச்னைகள் இருக்காது எனவும் அங்கு பணிபுரியும் ஆசிரியா்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவித்துள்ளனா். அவரும், ஒரே வளாகத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா்.