அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
முதல்வா் மருந்தகங்களில் ரூ.1.33 லட்சம் மருந்துகள் விற்பனை: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் ரூ. 1.33 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
சேந்தமங்கலம் முதல்வா் மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் பொதுமக்களிடம் மருந்துகளின் விலை மற்றும் மருந்தகத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினாா். தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக அண்மையில் முதல்வா் திறந்து வைத்தாா்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 17 முதல்வா் மருந்தகங்கள், தொழில் முனைவோா்கள் மூலம் 10 முதல்வா் மருந்தகங்கள் என மொத்தம் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வா் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன்மூலம் தனியாா் மருத்துவமனை, மருந்தகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வா் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன்பெறலாம். முதல்வா் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 27 மருந்தகங்களில் இதுவரை ரூ. 1.33 லட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
முன்னதாக, சேந்தமங்கலத்தில் கடைகளில் நெகிழி பயன்பாடுகள் குறித்தும், காரவள்ளியில் சமுதாய கூடம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்தும், கிருஷ்ணாபுரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.