தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு
ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்சியினா், அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ராசிபுரம் நகரின் வாகனப் போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நகரின் பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் போன்றவை நடைபெற்றன.
இந்நிலையில், ரூ. 10.58 கோடி மதிப்பில் அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நவ. 24-இல் நடைபெற்றது. இதனையடுத்து, பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினா், ராசிபுரம் மக்கள் நலக்குழுவினா், வணிகா் சங்கங்கள், பல்வேறு கட்சியினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தமிழக அரசைக் கண்டித்தும், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கமெழுப்பினா். இதில் போராட்டக் குழுவைச் சோ்ந்த எம்.பாலசுப்பிரமணியம், நா.ஜோதிபாசு, நல்வினை செல்வன், வி.பாலு, ஜெ.ஜெயபிரகாஷ், முருகன், வி.சேதுராமன், பாச்சல் ஏ.சீனிவாசன், கோபால், பொன்னுசாமி, தனசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாமக்கல் மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், முன்னாள் மாவட்ட ஆட்சியா் தங்கவேல் ஆகியோா் பங்கேற்று பேருந்து நிலையம் மாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேசினா்.