ராஜபாளையம்: தடைசெய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிட முயற்சி - போலீஸூடன் நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு!
ஈழப்போரை மையப்படுத்தியும், போரில் கொல்லப்பட்ட பெண் இசைவாணி அனுபவித்த சித்ரவதைகளை எடுத்துச்சொல்லும் விதமாகவும் பெங்களூரை சேர்ந்த இயக்குநர் கணேசன், 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு தடை விதித்திருந்ததால், படத்தின் பெயர் 'போர்களத்தில் ஒரு பூ' என்பதிலிருந்து '18.05.2009' என மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த திரைப்படம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பாலாஜி திரையரங்கில் காலை காட்சியாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு விளம்பர போர்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் படத்திற்காக வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் 'போர்க்களத்தில் ஒரு பூ' என அச்சிடப்பட்டிருந்தது.
மத்திய திரை தணிக்கைக் குழுவினால் தடை செய்யப்பட்ட இந்தப்படம், வெளியாகும் செய்தி காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து திரையரங்கிற்கு விரைந்துவந்த போலீஸார், படத்தை வெளியிட முடியாது எனக் கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் திரையரங்கு பரபரப்பானது. இந்த நிலையில் தகவல் அறிந்து அங்குவந்த அந்த திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய படக்குழுவினர், "படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரவித்து தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட படத்திற்கு தணிக்கை துறையினர் 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளனர். ஆகவே, படத்தை வெளியிடுவதில் எந்த விதிமீறிலும் இல்லை" எனக்கூறினர்.
இதை ஏற்றுக்கொள்ளாத போலீஸார், ``படத்தை திரையிடுவது தொடர்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்றபிறகு திரைப்படத்தை வெளியிடலாம். அதுவரை படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க முடியாது" எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து, ``திரைப்படத்தை திரையிட மீண்டும் முயற்சி செய்வேன்" என ஆத்திரமாக கூறிய இயக்குநர் கணேசன், அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து படத்தை திரையிடும் முயற்சி கைவிடப்பட்டது.