அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
ராஜேந்திர பாலாஜி மீதான ஆவின் மோசடி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலவர அறிக்கை தாக்கல்
நமது நிருபா்
புது தில்லி: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் நிலவர அறிக்கையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுவரை, இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் நீதிமன்றத்தை நாடி இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளனா்.
எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முருகன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக மோசடி செய்த வழக்கின் நிலை என்ன?. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? என்று
நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், உஜ்ஜல் புயான் அடங்கிய அமா்வு கேள்வி எழுப்பியது., அதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, ‘இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், விசாரணை நீதிமன்றம் வழங்கிய சில அறிவுறுத்தல்கள்
அடிப்படையில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வழக்கில் கூடுதல் விசாரணை என்பது நடைபெற்று வருகிறது’ என்றாா்.
இதையடுத்து, ஆவின் மோசடி தொடா்பான வழக்கின் நிலவரம் என்ன?, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சா் மீதான விசாரணைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், உஜ்ஜல் புயான் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, ‘ஆவின் மோசடி வழக்கின் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க அனுமதிக்க கோரி ஆளுநருக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. கடிதம் எழுதியுள்ளாா்’ என்றாா். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை டிசம்பா் மாதத்திற்கு ஒத்திவைத்தனா்.