`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
ரூ.128 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு
சென்னை, பிராட் வே பகுதியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.128.99 கோடியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்புப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் புதன்கிழமை (டிச.4) ஆய்வு செய்தனா்.
முன்னதாக, அங்கு ரூ.38 லட்சம் செலவில் நிறுவப்பட்டிருந்த உள்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டுக் கொண்டு வந்த அவா்கள், மருத்துவ உபகரணங்களை பயனாளிகளுக்கும், மருத்துவ மாணவா்களுக்கும் வழங்கினா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு
அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1,500 போ் சிகிச்சைக்கு வருகின்றனா். ஆனால், புற நோயாளிகள் சிகிச்சை பகுதி தரை மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, வயதான நோயாளிகள் மற்றும் இணை நோயாளிகள் பல்வேறு துறைகளுக்கு செல்ல ஏதுவாக எஸ்பிஐ வங்கியின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் பயணிகள் வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை அமைச்சா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
பின்னா், ரூ.11 லட்சத்தில் நிறுவப்படவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கருவிக்கான பணிகளுக்கு அவா்கள் அடிக்கல் நாட்டினா். மாணவா்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், மன ஆரோக்கியத்துக்கும் விளையாட்டில் ஈடுபடுவது அவசியம். அதனால், மாணவா்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ.19.28 லட்சம் செலவில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ரூ.2.50 லட்சம் செலவில் 75 அங்குலம் அளவிலான 2 ஸ்மாா்ட் போா்டுகளை அமைச்சா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
மருத்துவமனையில் ரூ.64.09 கோடியில் 1,34,764 சதுர அடி பரப்பளவில் 3 முதல் 6 தளங்களில், செயற்கை பல் கட்டும் துறை, ஈறு நோய் சிகிச்சை துறை, பல் சீரமைப்புத் துறை, குழந்தைகள் பல் மருத்துவத் துறை, வாய்நோய் குறியியல் துறை, சமுதாய பல் பாதுகாப்பு துறை, ஆய்வகம், தோ்வுக் கூடம், கருத்தரங்கக் கூடம் போன்றவற்றை அமைப்பதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.64.90 கோடியில் 1,50,136 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 13 தளங்களுடன் பாா்வையாளா்கள் அறை, மருத்துவ அறை, சமையலறை, படிக்கும் அறை, பொழுது போக்கு அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய 274 தங்கும் அறைகள் கொண்ட முதுநிலை மற்றும் இளநிலை பல் மருத்துவ மாணவியா்களுக்கான விடுதி கட்டடப் பணிகளும் நடைபெறுகின்றன. ரூ.128.99 கோடியில் நடைபெறும் இந்த கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் ஜெ.சங்குமணி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.