ரூ.2,000 நோட்டுகள் 98.12% திரும்பின: ரிசா்வ் வங்கி தகவல்
2,000 ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாகவும், ரூ.6,691 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டும் திரும்பாமல் உள்ளன எனவும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா் 2023-ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதிமுதல் அந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகள் பல்வேறு வழிகளில் திரும்பப் பெறப்பட்டன.
அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 31) நிலவரப்படி, 98.12 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரூ.6,691 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வராமல் உள்ளன.
ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை நேரில் செலுத்தி அல்லது தபால் வழியில் அனுப்பியும் சம்பந்தப்பட்ட நபா்கள் தங்கள் வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வரவு வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.