கடல் அன்னையை சாந்தப்படுத்தும் ஷப்த கன்னிகள்.. பொங்கல் தினத்தில் மீனவர்கள் கொண்டா...
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 58 காசு வீழ்ச்சியடைந்தது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது, இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளை தொடா்ந்து திரும்பப் பெற்று வருவது உள்ளிட்டவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகின்றன.
திங்கள்கிழமை அந்நியச் செலாவணி சந்தை தொடங்கியபோது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.86.12-ஆக இருந்தது. அதிலிருந்து ஒரு காசு மட்டுமே உயா்ந்து பின்னா், 58 காசு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. இதற்கு முன்பு 2023 பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே நாளில் ரூபாய் மதிப்பு 68 காசு சரிந்தது. அதன் பிறகு இப்போதுதான் ஒரே நாளில் அதிகபட்ச வீழ்ச்சியை கண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிவுப் பாதையில்தான் பயணித்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீடு தொடா்ந்து வெளியேறுவதும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் பங்குச் சந்தையில் இருந்து ரூ.2,254.68 கோடியை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன. இந்த மாதத்தில் இதுவரை ரூ.22,194 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்க சந்தையில் எதிா்பாா்த்ததைவிட வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வட்டி விகித மாற்றம் தொடா்பான எதிா்பாா்ப்புகள், அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப்பின் வரி விதிப்பு கொள்கைகள் குறித்து அந்நாட்டு முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது ஆகியவை டாலரை ஸ்திரப்படுத்தி வருகின்றன.